
ஈப்போ, மே 15 – புலாவ் பங்கோர் (Pulau Pangkor) கடற்பகுதியில் இந்தோனேசிய குடியேறிகளை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் படகு கவிழ்ந்த சம்பவத்தில் மேலும் ஒரு சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மாலை 7.40 மணியளவில் சம்பவ இடத்திலிருந்து சுமார் 3.6 மைல் தூரம் வடகிழக்கு கடல் பகுதியில் மீனவர்கள் ஆண் ஒருவரின் சடலத்தை கண்டுபிடித்ததாக மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (Malaysian Maritime Enforcement Agency – MMEA) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சடலம் பின்னர் கடலோர காவல்துறை கப்பலான பிஎஸ்சி 16 (PSC 16) மூலம் கம்போங் ஆச்சே துறைமுகத்துக்கு (Kampung Acheh Jetty) கொண்டு செல்லப்பட்டது.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை இன்று ஐந்தாவது நாளாக காலை 7 மணிக்கு மீண்டும் தொடங்கியது. தற்போது மாயமான மேலும் 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த படகு மே 11ஆம் தேதி புலாவ் பங்கோரிலிருந்து சுமார் 8.2 கடல் மைல் தொலைவில் கவிழ்ந்தது. படகில் 37 இந்தோனேசியர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது.
இதுவரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.



