பட்டவொர்த், மே-5, பினாங்கு, பட்டவொர்த்-கூலிம் நெடுஞ்சாலையில் (BKE) பதின்ம வயது இளைஞன் ஓட்டிய மோட்டார் சைக்கிள் லாரியுடன் உரசி விபத்துக்குள்ளானதில், படுகாயமேற்பட்டு அவன் உயிரிழந்தான்.
அவ்விபத்து நேற்று நண்பகல் வாக்கில் BKE நெடுஞ்சாலையின் 13.9-வது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
சம்பவத்தின் போது 19 வயது அவ்விளைஞன், கெடா கூலிமில் இருந்து செபராங் ஜெயாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தான்.
அப்போது அதே வழியில் சென்றுக் கொண்டிருந்த லாரியுடன் அவனது மோட்டார் சைக்கிள் உரசி தடம் புரண்டது.
இடப்பக்கச் சாலையில் விழுந்ததில் அவ்விளைஞனுக்கு கைகளிலும் கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட போதும், அவன் உயிரிழந்து விட்டது உறுதிப்படுத்தப்பட்டது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விசாரணைக்கு முன்வந்து உதவுமாறு செபராங் பெராய் தெங்ஙா போலீஸ் பொது மக்களைக் கேட்டுக் கொண்டது.
அக்கோர விபத்து, கார் dashcam-மில் 28 வினாடிகளுக்குப் பதிவாகி, அக்காணொலி முன்னதாக வைரலானது.
லாரி திடீரென மோட்டார் சைக்கிளை இடித்து அது தடம்புரள, மோட்டார் சைக்கிளோட்டி தூக்கி வீசப்பட்டு சாலை தடுப்பில் மோதி விழுவது அதில் தெரிகிறது.
அந்நபர் வலியால் துடித்து, பொது மக்களின் உதவியைக் கோருவது வரை dashcam-மில் பதிவாகியுள்ளது.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41-வது பிரிவின் கீழ் அவ்விபத்து விசாரிக்கப்படுகிறது.