
இஸ்கந்தர் புத்ரி, அக்டோபர் 30 – ஜோகூர், கெலாங் பாத்தா (Gelang Patah), தாமான் நுசா பெரிந்திஸ் (Taman Nusa Perintis) பகுதியில் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கைகள் வைக்கப்பட்டிருந்த பழக்கடை ஒன்று நேற்று இரவு தீப்பற்றி எரிந்ததில், சுமார் 60 விழுக்காடு சேதமடைந்தது.
இச்சம்பவத்தில் உயிரிழப்போ காயமோ ஏற்படவில்லை. இரவு 9.20 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்ற இஸ்கண்டார் புத்ரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையைச் சேர்ந்த ஏழு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீயணைப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், இரவு 10.52 மணிக்கு நடவடிக்கை நிறைவடைந்தது.
இதற்கிடையில், பழக்கடை தீப்பற்றி எரிந்தபோது பட்டாசுகள் வெடித்துச் சிதறும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவின.



