
பத்து பஹாட், ஜூன்-21-ஜோகூர், பத்து பஹாட் கடற்பகுதியில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான MET Malaysia தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 1.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 3.3-ராகப் பதிவாகியது.
இதன் மையப்புள்ளி பத்து பஹாட்டுக்கு தென்மேற்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிலும், 10 கிலோ மீட்டர் ஆழத்திலும் நிலைகொண்டிருந்தது.
இதனால் பத்து பஹாட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் இலேசான அதிர்வுகளை உணர்ந்திருக்கக்கூடும் என MET Malaysia குறிப்பிட்டது.
பத்து பஹாட் மாவட்டத்தில் பதிவாகும் ஆறாவது நிலநடுக்கம் இதுவாகும்.
ஆகக் கடைசியாக, கடந்த மார்ச் 14 மற்றும் ஏப்ரல் 4 ஆகிய தேதிகளிலும் இப்பகுதியில் இலேசான நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.
தற்போது நிலைமை தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



