கோத்தா திங்கி, ஏப்ரல் 16 – ஜோகூர், பத்து பஹாட்டிலுள்ள, பேரங்காடி ஒன்றிலிருந்து, “காபா” மினி பிரார்த்தனை விரிப்புகள் என கூறப்படும் 11 கால்மிதிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட நிறுவனம் நேற்று விளக்கமளித்துள்ள போதிலும், விசாரணை தொடரும்.
அவ்விவகாரம் தொடர்பில், குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள, AEON BiG பேரங்காடி மற்றும் A&R பேஷன் கலெக்ஷன் விநியோக நிறுவனம் ஆகிய தரப்புகளிடமிருந்து விளக்கம் பெறப்படுமென, ஜோகூர் இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முஹமட் பாரிட் முஹமட் காலிட் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பொருட்களை போலீஸ் பறிமுதல் செய்துவிட்ட போதிலும், விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்படுமென பாரிட் சொன்னார்.
அவ்வளவு பெரிய நிறுவனம், விற்கப்படும் பொருட்களின் பெயர்களை ஒழுங்குபடுத்துவதில் அக்கறை காட்டாதது கவலை அளிக்கிறது. மினி பிரார்த்தனை விரிப்புகள் உன்னதமானவை. அவை எப்படி மிதியடிகளுடன் ஒன்றாக வைக்கப்பட்டன எனவும் பாரிட் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதனால், அவர்களுக்கு எதிராக சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் பாரிட் சொன்னார்.
முன்னதாக, மினி பிரார்த்தனை விரிப்புகள், மிதியடிகள் என பெயர் குறிப்பிடப்பட்டிருந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்ததால், குழப்பம் ஏற்பட்டதாக, நேற்று AEON BiG பேரங்காடியும், A&R நிறுவனமும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தன.
எனினும், அது உண்மையென்றால், சம்பந்தப்பட்ட நிறுவனம் அந்த விரிப்புகளை சரியான இடத்தில் வைத்திருக்க வேண்டும். சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பும் வகையில் காபா படம் பொறிக்கப்பட்ட அதுபோன்ற விரிப்புகளை தாம் இதுவரை பார்த்ததில்லை என்று பாரிட் கிண்டலாக கூறியுள்ளார்.
அதனால், அதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிச் செய்ய, JAINJ – ஜோகூர் இஸ்லாமிய துறையும், JAKIM – மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையும் இணைந்து, AEON BiG உட்பட நாட்டிலுள்ள, அனைத்து மலாய், சீன மற்றும் இந்திய வர்த்தக மன்றங்களுக்கு விளக்கமளிப்பு அமர்வு ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் பாரிட் கூறியுள்ளார்.