பள்ளிகளில் பகடிவதைத் தடுப்பு கல்வியை அறிமுகப்படுத்த டத்தோ சிவகுமார் பரிந்துரை

கோலாலம்பூர், செப்டம்பர்-14,
கல்வி அமைச்சின் பகடிவதைத் தடுப்பு பிரச்சார இயக்கம், ஆரம்பப் பள்ளி முதல் அனைத்து மட்ட கல்வி நிறுவனங்களிலும் அமுல்படுத்தப்பட வேண்டும் என, Dinamik Sinar Kasih சமூக நலச் சங்கத்தின் தலைவர் டத்தோ என். சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.
இப்பிரச்சாரம் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், பகடிவதைத் தடுப்பு என்ற ஒரு பாடமாகவே, அது பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
இதை DELIMa டிஜிட்டல் கற்றல் தளத்திலும் கொண்டு வரலாம் என்றார் அவர்.
பின்லாந்து நாட்டில் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ள KiVa திட்டத்தைப் போன்றும் அமுல்படுத்தலாம்; இந்தப் பகடிவதைத் தடுப்புக் கல்வி, மாணவர்கள் மட்டுமல்லாமல் பள்ளிப் பணியாளர்கள் அனைவருக்கும் கற்றுத்தரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இப்படிப்பட்ட கல்வி, பெற்றோரது கவலைகளைக் குறைக்க உதவும் என்பதோடு, பள்ளிச் சூழல் மாணவர்களுக்கு பாதுகாப்பானதாக இருப்பதை உறுதிச் செய்யும் என்றார் அவர்.
நாட்டில் பகடிவதை சம்பவங்கள் தொடருவதால், அதனை களையும் குறுகிய மற்றும் நீண்ட கால திட்டமாக அமைச்சு விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்குகிறது.