சுக்காய், ஏப்ரல் 22 – திரங்கானு சுக்காயில் பாதுகாவலரின் இடுப்பில் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய இந்தோனேசியத் தோட்டத் தொழிலாளி, டிரேய்லரால் அடிபட்டு இடது காலை இழந்தார்.
Bandar Seri Bandi-யில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
சம்பவத்திற்கு முன்பாக, கையில் கத்தியுடன் தனக்குத் தானே பேசிக் கொண்டு, தோட்டக் குடியிருப்புப் பகுதியையும் அலுவலகத்தையும் அந்நபர் சுற்றி வந்துள்ளார்.
அதைக் கண்ட அந்தப் பாதுகாவலர் வீட்டுக்குச் செல்லுமாறு சத்தம் போட, வீட்டுக்குச் செல்வது போல் சென்று செம்பனைத் தோட்டம் பக்கமாக அத்தொழிலாளி ஓடியிருக்கிறார்.
துரத்திச் சென்ற பாதுகாவலரை கையில் வைத்திருந்த கத்தியால் குத்தி விட்டு அந்நபர் ஓட்டம் பிடித்தார்.
ஓடியவர், சாலையில் வந்துக் கொண்டிருந்த டிரேய்லர் மீது ஏற முயன்று கீழே விழ, அது அவர் மேலேறியது.
அதிகாலை 5 மணிக்கு பொது மக்கள் கண்டு தகவல் கொடுக்க, அந்நபர் கெமாமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரின் இடது கால் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது.
இடுப்பில் கத்திக் குத்துக்கு ஆளான பாதுகாவலரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேண்டுமென்றே ஆயுதத்தால் காயம் ஏற்படுத்தியது மற்றும் மிரட்டல் விடுத்ததன் பேரில், கத்தியால் குத்திய இந்தோனீசியத் தொழிலாளி குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறார்.
டிரேய்லர் ஓட்டுநரையும் விசாரணைக்காகப் போலீஸ் தேடுகிறது.