குவாந்தான், ஜூன்,15 – பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிப் பெறும் முயற்சியில் தேசியச் சாதனையை முறியடிக்க இலக்குக் கொண்டுள்ளார் 400 மீட்டர் ஓட்டத் தாரகை ஷெரீன் சேம்சன் வல்லபாய் (Shereen Samson Vallabouy).
குவாந்தானில் நடைபெற்று வரும் மலேசியப் பொது ஓட்டப்பந்தயப் போட்டியிலும், ஜூன் 23-24 வரை நடைபெற போகும் கசக்ஸ்தான் (Kazakhstan) பொது ஓட்டப்பந்தயப் போட்டியிலும் எப்படியாவது அச்சாதனையை முறியடிப்பதே ஷெரீனின் திட்டம்.
அப்படி புதியச் சாதனை நேரத்தைப் படைக்கும் பட்சத்தில், தர வரிசையில் ஏற்றம் கண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிப் பெறும் வாய்ப்பை அவரால் பிரகாசப்படுத்திக் கொள்ள முடியும்.
Hangzhou ஆசிய விளையாட்டுப் போட்டியின் வெண்கலப் பதக்க வெற்றியாளருமான ஷெரீன், 400 மீட்டர் ஓட்டத்தில் வைத்திருக்கும் தேசிய சாதனை நேரம் 51.79 வினாடிகளாகும்.
26 வயது ஷெரீன் தற்போது தர வரிசையில் 63-வது இடத்தில் இருக்கிறார்.
முதல் 48 இடங்களில் வருவோருக்கே பாரீசுக்கு டிக்கெட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் ஓட்டப்பந்தய சகாப்தங்களான சேம்சன் வல்லாபாய் – ஜோசப்பின் மேரி தம்பதியின் பெருமைக்குரிய மகளான ஷெரீன், கடந்த ஜூன் 2-ஆம் தேதி தான் புதிய தேசியச் சாதனை நேரத்தைப் பதிவுச் செய்தார்.