
கோலாலம்பூர், ஜூலை 9- செப்பாங் , பண்டார் பாரு சாலாக் திங்கியிலுள்ள கோயிலில் பெண் ஒருவரிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்ட பூசாரியின் செயலை கடுமையாக கருதுவதோடு சம்பந்தப்பட்ட ஆசாமியை விரைந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தும்படி மஹிமா தலைவர் டத்தோ என்.
சிவகுமார் போலீசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் எல்லை மீறியதாகவும், வழிபாட்டுத் தலத்தின் புனிதத்தையும் சீர்குலைத்துள்ளது. எந்தவொரு கோவிலிலோ அல்லது வழிபாட்டுத் தலத்திலோ இதுபோன்ற விவகாரங்களை எதிர்த்துப் போராடுவதில் அதிகாரிகள் உறுதியாகவும், நியாயமாகவும், சமமாகவும் செயல்பட வேண்டும் என மலேசிய இந்து கோயில்கள் மன்றம் மற்றும் மலேசிய இந்து சமய சங்கங்களின் தலைவரான டத்தோ N. சிவக்குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் நீதி மற்றும் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை மஹிமா எப்போதும் உறுதி செய்கிறது. இதன் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட ஆசாமி நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர் உணர்ந்தால் அவருக்கு ஆலோசனை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் சிவக்குமார் கூறியுள்ளார்.
மேலும் சம்பந்தப்பட்ட பூசாரியை விரைந்து கைது செய்து தண்டனைச் சட்டத்தின் 354ஆவது பிரிவின் கீழ் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் சிவக்குமார் பரிந்துரைத்துள்ளார்.