
ஜோர்ஜ்டவுன், மே-2,
பினாங்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க Lebuh Pantai பகுதியில், இந்திய பாரம்பரியக் கலைக்கூடம் மற்றும் பண்பாட்டு மையம் (IHCC) நேற்று பிரம்மாண்டமாகத் திறந்து வைக்கப்பட்டது.
பினாங்கு முதல்வர் சாவ் கோன் இயோ தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், துணையமைச்சர் லிம் ஹுய் யிங், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு, பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் RSN ராயர், துணைத் தலைவர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
திறப்புரையில் பேசிய முதல்வர், பினாங்கின் பன்முக கலாச்சாரத்தின் முக்கிய அடையாளமாக இந்தக் கலைக்கூடமும் பண்பாட்டு மையமும் திகழும் என்றார்.
நமது வரலாறும் பண்பாட்டுக் கூறுகளும் அழியக் கூடாது என, டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ தெரிவித்தார்.
டத்தோ ஸ்ரீ ராமநாதன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து, தமிழ்நாடு மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட அரிய வகை பழங்காலப் பொருட்களை இங்கே காட்சிப்படுத்தியுள்ளனர்.
திரும்பும் பக்கமெல்லாம், பண்டைய கால பீங்கான் மங்குகளிலிருந்து கட்டில், படுக்கை, மெத்தை, நாற்காலிகள் வரை வரலாற்று பொக்கிஷங்கள், மேல்தளம் மற்றும் கீழ்தளத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதனைப் பார்ப்பதற்கு ஒரு நீண்ட பாரம்பரிய கடைத் தெருவைப் போல் உள்ளது.
இங்குள்ள ஏராளமான பொருட்கள் இந்தியாவிலிருந்து கொள்கலன் கப்பல்களில் கொண்டு வரப்பட்டுள்ள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் திறப்பு விழா குறித்துத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட டத்தோஸ்ரீ ராமநாதன், “இந்தக் கலைக்கூடம் மற்றும் பண்பாட்டு மையத்தை உருவாக்க வேண்டும் என்பது எனது நீண்ட காலக் கனவு” என்றார்.
“எனது சமூகத்திற்காக ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்க வேண்டும் என்பது கடந்த 20 ஆண்டுகால இலட்சியமாகும். இந்தக் கலைக்கூடம் இந்தியா மற்றும் மலேசியா இடையிலான நீடித்த உறவின் சான்றாகத் திகழ்கிறது. இந்த முயற்சி வெற்றிபெற உதவிய அனைத்துத் தரப்பினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் மேலும் கூறினார்.
“இங்கே இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஒரு கதையைச் சொல்லும்; ஒவ்வொரு படைப்பும் மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும்; ஒவ்வொரு பகுதியும் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் பாலமாக அமையும்” என ராமநாதன் நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
இந்தியப் பாரம்பரிய உடைகளை அணிந்து சீன மற்றும் இந்திய சமூகத்தினர் இணைந்து இவ்விழாவைச் சிறப்பித்தது, மலேசியாவின் பல்லின ஒற்றுமையை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்தது.
உலகின் மிக நீண்ட வரிசை அமைப்பைக் கொண்ட இந்தக் கலைக்கூடத்தில் உலா வரும்போது, பார்வையாளர்கள் ஒரு கணம் தங்களைப் பழங்காலத்திற்கே அழைத்துச் செல்லப்பட்ட உணர்வைப் பெறுகின்றனர்.
இந்த வரலாற்றுப் பொக்கிஷக் காட்சியகம், பினாங்கின் சுற்றுலாத் துறைக்கும், எதிர்காலத் தலைமுறையினர் நமது பாரம்பரியத்தை அறிந்து கொள்ளவும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை.



