
கோத்தா பாரு, செப்டம்பர்-4,புத்ராஜெயாவில் பாஸ் கட்சித் தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், பிரதமர் வேட்பாளராகத் தன் சொந்தத் தலைவரையே முன்னிறுத்த வேண்டும் என்றும் அதன் இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
கிளந்தான், கோத்தா பாருவில் நடைபெற்ற பாஸ் இளைஞர் பிரிவு மாநாட்டில் உரையாற்றிய கெடா மாநில இளைஞர் பிரிவுத் தலைவர்களில் ஒருவரான இல்யாஸ் அஹ்மாட் (Ilyas Ahmad), மற்ற தலைவர்களுக்காக ஒதுங்கியிருக்காமல், தேசிய அளவில் முஸ்லீம்களை ஒன்றுபடுத்தும் முயற்சிகளுக்கு இனி பாஸ் கட்சியே தலைமைத் தாங்க வேண்டும் எனக் கூறினார்.
ஊழலற்ற தூய்மையான நிர்வாக ஆற்றல் பாஸ் கட்சிக்கு இருப்பதால், அரசாங்கத்தை வழிநடத்த தங்களுக்கு முழு தகுதி உள்ளதாக இல்யாஸ் சுட்டிக் காட்டினார்.
முன்னதாக, பாஸ் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சம்சூரி மொக்தாரை பிரதமர் வேட்பாளராக பாஸ் இளைஞர் பிரிவு முன்மொழிந்திருந்தது.
அதே சமயம், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் உள்ள பெர்சாத்து கட்சி, அதன் தனது தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசினைப் பிரதமர் வேட்பாளராக ஏற்கெனவே அறிவித்துள்ளது.
பெர்சாத்துவிலிருந்து நீக்கப்பட்டு வவாசான் என்ற புதியக் கட்சிக்குத் தலைமையேற்று பெரிக்காத்தானில் இணைந்துள்ள டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடினைப் பிரதமராக்க வேண்டுமென அவரது கட்சியினரும் விரும்புகின்றனர்.
இதற்கெல்லாம் மேலாக, 16-ஆவது பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வென்றால் அக்கட்சியும் பிரதமர் நாற்காலியைக் கோரும்.
ஆக, பாரிசான் – பாஸ் இடையிலான புதிய அரசியல் ஒத்துழைப்புக்கு இந்தப் பிரதமர் பதவி வேட்பாளர் விவகாரம் முக்கியப் பிரச்னையாக உருவெடுக்கலாம் என பார்வையாளர்கள் கூறுகின்றனர்.


