கோலாலம்பூர், ஜூன் 18 – பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ள, பிரிக்ஸ் (BRICS) கூட்டணியில் இணைவதற்கான நடைமுறைகளை, மலேசியா விரைவில் தொடங்கவிருப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அந்த கூட்டணியில் இணைவது குறித்து, அரசாங்கம் முடிவுச் செய்துள்ளது. விரைவில் அதற்கான நடைமுறைகள் தொடங்கப்படுமென, பிரதமர் கூறியுள்ளார்.
அதற்காக, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுடன் (Luiz Inacio Lula da Silva) தாம் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும், தென்னாப்பிரிக்க அரசாங்கத்தின் இறுதி முடிவு மற்றும் பதிலுக்காக காத்திருப்பதாகவும் பிரதமர் சொன்னார்.
ஷாங்காய் (Shanghai) செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில், பிரதமர் அவ்விவரங்களை வெளியிட்டார்.
2006-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து, BRICS கூட்டணி இரு கட்ட விரிவாக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
2011-ஆம் ஆண்டு, BRICS கூட்டணியின் அசல் உறுப்பினர்களான பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவுடன் தென் ஆப்பிரிக்கா இணைந்தது.
2023-ஆம் ஆண்டு, அந்த கூட்டணியில் அர்ஜெண்டினா இணைந்ததை அடுத்து, ஆறு உறுப்பினர்களை கொண்ட கூட்டணியாக BRICS உருவெடுத்தது. எனினும், அதே ஆண்டு டிசம்பரில், அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அர்ஜெண்டினா அறிவித்தது.
இவ்வாண்டு ஜனவரியில், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஜக்கிய அரபு சிற்றரசு ஆகியவை BRICS கூட்டணியில் உறுப்பியம் பெற்றது குறிப்பிடத்தக்கது.