லண்டன், அக்டோபர்-26, பிரிட்டனில் தனக்குப் பிறந்த குழந்தையைப் பயணப் பெட்டியில் மறைத்து வைத்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மலேசிய மாணவிக்கு, வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டன் Coventry மாவட்டத்திலுள்ள Warwick நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியது.
குழந்தையைக் கொன்ற வழக்கில் 22 வயது தியோ ஜியா சின் (Teo Jia Xin) குற்றவாளியே என முன்னதாகத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், தற்போது தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
Coventry பல்கலைக்கழகத்தில் பயில்வதற்காக இவ்வாண்டு தொடக்கத்தில் லண்டன் சென்ற தியோ, கடந்த மார்ச் நான்காம் தேதி முழு பிரசவத்தில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார்.
எனினும் குடியிருப்பாளர்களுக்குத் தெரியாமலிருக்க பச்சிளங்குழந்தை என்றும் பாராமல் அதனைப் பயணப் பெட்டிக்குள் மறைந்து வைத்துள்ளார்.
மேற்கல்வி பாதிக்கப்பட்டு விடும் என்ற பயத்தில் மலேசியாவிலுள்ள குடும்பத்தினரிடமிருந்தும் அத்தகவலை அப்பெண் மறைத்துள்ளார்.
கடைசியில் மருத்துவமனைச் சென்ற போதே அவரின் குட்டு அம்பலமானது.
நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட போது, குழந்தையைக் கொல்லச் சொல்லி தனக்குக் குரலொன்று கேட்டதாகத் தியோ கூறிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.