லண்டன், ஜூலை 6 – பரபரப்பாக நடந்த பிரிட்டிஷ் நாடாளுமன்ற தேர்தலில் தொழில் அதாவது லேபர் கட்சியின் சார்பில் உமா குமரன் முதல் தமிழ் வம்சாவளி பெண் உறுப்பினராக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
1980 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் உள்நாட்டு போரின் போது அங்கிருந்து தப்பி வந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்த பெண்ணான உமா குமரன் லேபர் கட்சியின் சார்பில் Stratford மற்றும் Bow நாடாளுமன்ற தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
இவரது வெற்றிக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது x தளத்தில் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.
Stratford மற்றும் Bow நாடாளுமன்ற தொகுதியில் மட்டுமின்றி பிரிட்டிஷ் வரலாற்றில் தமிழ் பெண் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
உமா குமரன் கிழக்கு லண்டன்னில் (East London) பிறந்து வளர்ந்தவர் ஆவார்.
தமிழர்களான அவரது பெற்றோர் 1980ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு போரின்போது இலங்கையிலிருந்து லண்டன் தப்பி வந்தவர்களாவர்.
உமா குமரன் லேபர் கட்சியில் இணைவதற்கு முன் தேசிய சுகாதார சேவையின் நிபுணராக பணியாற்றி வந்தார்.
பிரிட்டனின் பொருளாதாரம், வர்த்தகம், கலை , கலாச்சாரம் மற்றும் பொதுச் சேவைகளில் தமிழர்கள் அளப்பரிய பங்கை ஆற்றி வந்துள்ளதாக அண்மையில் தமிழ் கார்டியனுக்கு வழங்கிய நேர்க்காணலில் உமா குமரன் தெரிவித்திருந்தார்.
தம் மீதும், பிரிட்டிஷ் லேபர் கட்சி மீதும் நம்பிக்கை வைத்த அனைவருக்கும் அவர் X தளத்தில் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.