கோத்தா கினாபாலு, ஜூலை-12 – பிலிப்பின்சின் மின்டானோ (Mindanao) தீவில் இன்று காலை ரிக்டர் அளவைக் கருவியில் 6.6-ராகப் பதிவாகிய நிலநடுக்கம், சபாவிலும் உணரப்பட்டது.
குறிப்பாக கோத்தா கினாபாலுவில் அதிர்வுகள் உணரப்பட்டு, கட்டடங்களும் குலுங்கின.
இதனால் துன் முஸ்தபா கோபுரம், கினாபாலு கோபுரம், கோத்தா கினபாலு மாநகர மன்ற மண்டபம் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்து மக்கள் பதட்டத்தில் வெளியே ஓடினர்.
காலை 10 மணியளவில் சுமார் 10 வினாடிகளுக்கு நில அதிர்வு ஏற்பட்டதாக அஸ்லி மொஹமட் அபு பாக்கார் ( Azli Mohd Abu Bakar) என்பவர் கூறினார்.
15-வது மாடியில் அலுவலகப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது திடீரென கட்டடம் குலுங்குவது போல் தோன்றியது; நான் கூட எனக்கு தான் தலைசுற்றல் ஏற்பட்டதாக நினைத்தேன்; ஆனால் மேசைகளில் இருந்த பொருட்களும் குலுங்கிய போதே, நில நடுக்கம் ஏற்பட்டதாக நண்பர் கூறினார் என அஸ்லி அனுபவத்தைப் பகிர்ந்துக் கொண்டார்.
தாமதிக்காமல் அனைவரும் உடனே கீழ் தளத்திற்கு இறங்கி பாதுகாப்பான இடத்தில் போய் நின்றுக் கொண்டோம் என்றார் அவர்.
கட்டடம் பாதுகாப்பாக இருப்பது உறுதிபடுத்தப்படும் வரை, அலுவலகத்திற்குச் செல்ல வேண்டாமென தாங்கள் அறிவுறுத்தப்பட்டதாவும் அவர் சொன்னார்.
கட்டடங்கள் குலுங்கிய இடங்களுக்கு வெளியே ஊழியர்கள் குழுமியிருக்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில், நில அதிர்வு குறித்து தகவல் கிடைத்த தீயணைப்பு மீட்புத் துறை, பாதுகாப்பு நடவடிக்கையாக 3 குழுக்களை சம்பவ இடங்களுக்கு அனுப்பி வைத்தது.
மின்டானோ தீவில் ஏற்பட்ட அந்த வலுவான நிலநடுக்கத்தால் மலேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.