Latestமலேசியா

பிளாஸ்டிக் கொள்கலனில் RON95 பெட்ரோலை நிரப்பிய சிங்கப்பூர் ஓட்டுனர்; சம்பந்தப்பட்ட நிலையத்தை கண்டறிய அமைச்சு முயற்சி

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-4 – சிங்கப்பூர் பதிவு எண்ணுடன் கூடிய ஆடம்பர வாகனத்தில் வந்த ஒருவர் பிளாஸ்டிக் கொள்கலனில் RON95 பெட்ரோலை நிரப்பும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு ஜோகூர் பாரு , இஸ்கந்தர் புத்ரியிலுள்ள பெட்ரோல் நிலையத்தை அடையாளம் கண்டு வருகிறது.

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் என நம்பப்படும் ஒருவரின் புகைப்படம் என நேற்று முதல் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது குறித்து தனது துறைக்குத் தெரியும் என்று ஜோகூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சின் ஜோகூர் மாநில இயக்குநர் லிலிஸ் சஸ்லிண்டா போர்னோமோ ( Lilis Saslinda Pornoma ) தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிலையத்தின் இருப்பிடம் மற்றும் ஏற்கனவே உள்ள விதிமுறைகளை அந்த பெட்ரோல் நிலையம் மீறியுள்ளதா என்பதை அடையாளம் காணவும் விசாரணை நடந்து வருகிறது. வெளிநாட்டு வாகனங்களுக்கு RON95 விற்பனை செய்வதற்கான தடை இன்னும் நடைமுறையில் உள்ளது, மேலும் எந்தவொரு மீறலும் 1961 ஆம் ஆண்டின் விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம் என Lilis Saslinda Pornoma  கூறினார்.

விசாரணையில் குற்றம் நடந்திருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பெட்ரோல் நிலையங்களை நடத்துபவர்கள் அலட்சியமாகவோ அல்லது உடந்தையாகவோ இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, இஸ்கந்தர் புத்ரியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் ஒரு பிளாஸ்டிக் கொள்கலனில் RON95 நிரப்பும் சொகுசு வாகன உரிமையாளரின் படம் சமூக ஊடகங்களில் வைரலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!