
கோலாலம்பூர், அக்-08-மோசமடைந்து வரும் புகைமூட்டத்தைக் கருத்தில் கொண்டு, கல்வியமைச்சு மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என ம.இ.கா தேசிய வியூக இயக்குனர் டத்தோ சிவராஜ் சந்திரன் வலியுறுத்தியுள்ளார். எனவே பள்ளிகளை மூடுவதில் கல்வி அமைச்சு தாமதிக்கக்கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.
ஜோகூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட்டுள்ள நிலையில், மற்ற பகுதிகளில் அதிகாரப்பூர்வ உத்தரவுக்காகக் காத்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்பே கல்வி அமைச்சு அவசரமாகக் கூடி அது குறித்து முடிவெடுக்க வேண்டும் என அவர் கூறினார்.
புகைமூட்டத்தில் உள்ள நுண்துகள்கள் நுரையீரலுக்குள் சென்று சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன், குழந்தைகளுக்கு அதிக பாதிப்பைக் கொண்டு வரலாம். அதனால் இருமல், மூச்சுத்திணறல் மற்றும் ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் சிவராஜ் குறிப்பிட்டார். பள்ளிகளைத் தொடர்ந்து நடத்துவது பாதுகாப்பற்றதாக இருந்தால், கோவிட்-19 காலத்தைப் போன்று இணையவழிக் கல்வியை அமல்படுத்தலாம் என்றாரவர்.
பொந்தியான் பகுதியில் பள்ளி சம்பந்தப்பட்ட விஷயத்திற்காக சென்று கொண்டிருந்த 18, 11 மற்றும் 8 வயதுடைய மூன்று உடன்பிறப்புகள் விபத்தில் உயிரிழந்தனர். அதற்கு புகைமூட்டம் காரணம் எனக் கூறவில்லை. ஆயினும் அதனை சாதாரணமான ஒன்றாக எடுத்துக் கொள்ள முடியாது என அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும், காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 200-ஐ எட்டும் வரை காத்திருக்காமல், நிலைமையின் ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளை மூடிய பின்னர் பாடங்களை மீண்டும் தொடர முடியும். இழந்த உயிர்களை மீண்டும் பெற முடியாது என சிவராஜ் வலியுறுத்தினார்.



