
கோலாலம்பூர், அக்டோபர் 8 – பல்வேறு இனங்களின் தனித்துவத்தை அழிக்காமல், அவற்றை ஒருங்கிணைத்து வலுவான மலேசிய அடையாளத்தை உருவாக்க வேண்டுமென தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஆரோன் ஆகோ டாகாங் தெரிவித்துள்ளார்.
மலாய், சீனர், இந்தியர், கடசான்-டூசுன், பாஜாவ், முருட், இபான், பிடாயு, மெலானாவ் மற்றும் பூர்வகுடியினர் என பல்வேறு சமூகங்கள் தங்களது பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்துக்கொண்டே, மலேசியர்கள் என்ற ஒரே தேசிய அடையாளத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்றார். நாட்டின் ஒற்றுமைக்கு கூட்டாட்சி அரசியலமைப்பும் ருக்குன் நெகாராவும் அடிப்படையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இனப் பிளவு, தவறான தகவல்கள் மற்றும் இன, சமய அடையாளங்களைப் பயன்படுத்தி மக்களைப் பிரிப்பது ஆகியவை தற்போது எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் என அவர் கூறினார். சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் மிக வேகமாகப் பரவுவதால், மக்கள் தகவல்களைச் சரிபார்த்து பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தேசிய ஒற்றுமை என்பது ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் நிகழ்வு அல்ல; அது ஒவ்வொரு நாளும் கடைப்பிடிக்க வேண்டிய சமூகப் பொறுப்பு என அவர் தெரிவித்தார். 1957 மலாயாவுக்கு விடுதலையையும், 1963 மலேசியாவையும், 1970 ருக்குன் நெகாராவையும் வழங்கியது. 2026 நமக்கு ஒரு பொறுப்பை வழங்குகிறது; 2063-ஆம் ஆண்டு மலேசியா தனது 100-வது ஆண்டை அடையும் போது, அனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வுடன் வாழும் வலுவான, ஒற்றுமையான தேசமாக மலேசியா இருக்க வேண்டும் என்றார்.
கோலாலம்பூர் தேசிய அருங்காட்சியகத்தில் இன்று நடைபெற்ற செரி நெகாரா கலந்துரையாடல் 2026 நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், நிகழ்ச்சியையும் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.



