Latestமலேசியா

பள்ளி வளாகங்களில் 30 கி.மீ வேக வரம்பு: 2 ஆண்டுகளாகியும் இன்னும் அரசிதழில் வெளியிடப்படவில்லை

கோலாலம்பூர், அக்-08-நாடு முழுவதும் பள்ளி வளாகங்களில் மணிக்கு 30 கி.மீ வேக வரம்பை அமல்படுத்தும் திட்டம் அங்கீகரிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அரசிதழில் வெளியிடப்படவில்லை. தேவையான சட்டத் திருத்தங்கள் இன்னும் மறுஆய்வில் உள்ளதால் காலதாமதமாவதாக கல்வியமைச்சர் Datuk Seri Fadhlina Sidek தெரிவித்தார்.

மாணவர்கள் மற்றும் சாலைப் பயனீட்டாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அத்திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து போக்குவரத்து அமைச்சு சட்டத் திருத்தங்களை மறுஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.

புதிய வேக வரம்புடன் சாலை அடையாளங்கள் அமைக்கப்படுவதுடன், கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். பள்ளி வளாகங்களுக்குள் ஏற்கெனவே மணிக்கு 15 கி.மீ வேக வரம்பு அமலில் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வேளையில், பள்ளிகளைச் சுற்றியுள்ள சாலைகளின் பாதுகாப்பை மேம்படுத்த கோலாலம்பூர், சிலாங்கூர், புத்ராஜயா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாதுகாப்பான பள்ளி வளாக முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. வேகத் தடைகள், எச்சரிக்கைப் பலகைகள், பாதசாரிகள் கடக்கும் இடங்கள் மற்றும் பாதுகாப்புத் தடைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், பள்ளி வளாகங்களிலும் அதைச் சுற்றியுள்ள சாலைகளிலும் பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என Fadhlina கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!