
கோலாலம்பூர், நவ.26-அரச மலேசிய ஆகாயப்படையைச் சேர்ந்த சில வீரர்கள் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் கும்பல், சுமார் 156 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள methamphetamine போதைப்பொருளைக் கடத்துவதற்கு ராணுவ விமானத்தை 21 முறை பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tawauவில் உள்ள அந்தக் கும்பலின் பிரிவு, 1.8 டன் Methamphetamine போதைப்பொருளைக் கடத்துவதற்காக ஏழு முறை இராணுவச் சொத்துக்களைப் பயன்படுத்தியுள்ளது. லபுவானில் உள்ள பிரிவு 1.2 டன் போதைப்பொருளைக் கடத்த 14 முறை இராணுவச் சொத்துக்களைப் பயன்படுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail மக்களவையில் தெரிவித்தார்.
அப்போதைப்பொருள் கடத்தல் கும்பல் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த நவம்பர் 17ஆம் தேதி நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில், ஆகாயப்படையைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள், இரு பணியாளர்கள் மற்றும் ஆறு பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், 4.83 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 96.64 கிலோ Methamphetamine போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
அக்கும்பலின் தலைவன் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், இதுவரை கைது செய்யப்படவில்லை. சந்தேக நபர்களுக்கு ராணுவப் பணியாளர்கள் மற்றும் விமானச் செயல்பாடுகளுடன் தொடர்பு இருந்ததுடன், குறிப்பிட்ட இடங்களை அணுகும் வசதியும் இருந்ததாக Saifuddin கூறினார்.
கடத்தல் நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள நிதியுதவியாளர்கள், திட்டமிட்டவர்கள் மற்றும் செயல்படுத்தியவர்களைக் கண்டறிய விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குற்றத்தில் தொடர்புடையவர்கள் பதவி அல்லது தகுதியைப் பொருட்படுத்தாமல் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
தற்போது அபாயகரமான போதைப்பொருள் சட்டம் 1952-இன் பிரிவு 39B-ன் கீழ் விசாரணை நடைபெறுகிறது. மேலும், 2012 பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் (SOSMA) கீழும் விசாரிப்பது குறித்து காவல்துறை பரிசீலித்து வருகிறது. சுபாங் ஆகாயப்படைத் தளத்தில் வழக்கமான சோதனையின்போது ஐந்து பைகள் மற்றும் ஒரு பெட்டியில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக கடந்த வாரம் தற்காப்பு அமைச்சர் Khaled Nordin தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.



