
கோலாலம்பூர், நவ.26-Jalan Jelatekக்கில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்த விபத்து தொடர்பில், அஜாக்கிரதையாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட லிபிய மாணவர் 17,000 ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரது நாட்டுத் தூதரகத்தின் உதவியுடன் ஜாமீன் தொகை செலுத்தப்பட்டது.
தனியார் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பயிலும் 32 வயதான Ali Abdul Rahman Mahmoud Elmaki, நேற்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். நவம்பர் 21ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில், Wangsa Majuவில் இருந்து Taman Keramat நோக்கிச் சென்றபோது, அவர் ஓட்டிய புரோட்டான் சாகா கார் மோதி 43 வயது Mohd Hairezam Omar உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அக்குற்றம் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 20,000 ரிங்கிட் முதல் 50,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
அரசுத் தரப்பு 70,000 ரிங்கிட் ஜாமீன் கோரிய நிலையில், மாணவர் அடுத்த மாதம் தேர்வு எழுத வேண்டியிருப்பதால் அவரது வழக்கறிஞர் குறைந்த தொகையைக் கோரினார். அதனை அடுத்து, மலேசியாவைச் சேர்ந்த இருவரின் உத்தரவாதத்துடன் 17,000 ரிங்கிட் ஜாமீனை நீதிமன்றம் அனுமதித்தது.
மேலும், கடப்பிதழ் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், மாதந்தோறும் காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டது. அவரது ஓட்டுநர் உரிமமும் வழக்கு முடியும் வரை தற்காலிகமாக முடக்கப்பட்டது. அடுத்த விசாரணை ஜனவரி 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



