
கோலாலம்பூர், மே 18 – இன்று அதிகாலை, புக்கிட் பிந்தாங், ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சாலையின் நடுவில் ஒரு துரித உணவகத்திற்கு அருகே, டொயோட்டா ஹிலக்ஸ் வாகனத்தில் தீப்பந்தங்களைக் ஏந்திக்கொண்டு கொடியை அசைத்ததாக நம்பப்படும் ஒரு குழுவினரை போலீஸ் தேடிவருகிறது.
அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம், சமூக ஊடகங்களில் வைரலான ஒரு காணொளி மூலம் கண்டறியப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சஸாலி ஆடம் ( Sazalee Adam) தெரிவித்தார்.
விசாரணைக்கு உதவுவதற்காக, சம்பந்தப்பட்ட அனைத்து வாகனங்களின் உரிமையாளர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இத்தகைய நடவடிக்கைகள் பொதுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதால், அவை மிகவும் பொருத்தமற்றவை, என்று அவர் இன்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
பல நபர்கள் ஒரு டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் இரண்டு ‘ஸ்க்ராம்ப்ளர்’ மோட்டார் சைக்கிள்களில் ஏறி இந்த அபாயகரமான செயலில் ஈடுபடுவது பதிவாகியிருந்தது.
சம்பந்தப்பட்ட குழுவின் நடவடிக்கைகள் பொது அமைதியைக் குலைப்பதுடன், அப்பகுதியில் உள்ள பார்வையாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் என அவர் தெரிவித்தார்.
காணொளியில் கண்டறியப்பட்ட டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் மின்சார மோட்டார் சைக்கிள்கள் என நம்பப்படும் இரண்டு ஸ்க்ராம்ப்ளர் மோட்டார் சைக்கிள்களுடன், இந்தச் சம்பவத்தில் சுமார் ஏழு முதல் எட்டு நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.



