
புத்ராஜெயா, மே-30-பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு ஜூன் 1 முதல் அறிமுகமாகவுள்ள புதிய MyKad அடையாள அட்டை விநியோகத்தில், யாருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தேசிய பதிவிலாகாவான JPN வெளியிட்டுள்ளது.
புதிய MyKad அட்டை விநியோகம் முதல் கட்டமாக புத்ராஜெயா தலைமையகம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 கிளை அலுவலகங்களில் மட்டுமே படிப்படியாகத் தொடங்கப்படும்.
இதில், பழைய பிளாஸ்டிக் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள், ‘லேசர்’ செதுக்கப்பட்ட நிழற்பட வடிவம் இல்லாத முதல் பதிப்பு MyKad பயன்படுத்துபவர்கள் மற்றும் இணையம் மூலமாக முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டுமே முதல் முன்னுரிமை வழங்கப்படும்.
இவர்கள், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் தங்களது அட்டைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அதேவேளையில், தற்போதைய வழக்கமான MyKad வைத்துள்ள பொது மக்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை; அவர்கள் அவசர அவசரமாக JPN அலுவலகங்களுக்குப் படையெடுக்கத் தேவையில்லை என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய MyKad அட்டைகள் அனைத்தும் வழக்கம் போல் செல்லுபடியாகும்.
பொது மக்களின் அரசாங்க நிதியுதவிகள் எதிலும் இந்த புதிய அட்டை மாற்றத்தினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.



