மலேசியா

புதிய வழிபாட்டுத் தலங்களுக்கான விதிமுறைகள்: சிலாங்கூர் மாநில அரசு விளக்கம்

கோலாலம்பூர், மே-24,

​சிலாங்கூரில் வணிக வளாகப் பகுதிகளில் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களைப் புதிதாக அமைப்பதற்குத் தடை விதிக்கும் புதியத் திட்டமிடல் வழிகாட்டி நெறிமுறைகளை, மாநில அரசு தற்காத்துள்ளது.

வணிகப் பகுதிகளில் நிலவும் கடுமையான இடநெருக்கடி மற்றும் போக்குவரத்துப் பிரச்னைகளைக் குறைத்து, முறையான வாகன நிறுத்துமிட வசதிகளை மேம்படுத்தும் நோக்கிலேயே, இந்தப் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மந்திரி பெசார் அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒருவர் FMT-யிடம் இதனைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.

​என்றாலும், இந்தப் புதிய விதிமுறைகள் இனிவரும் புதிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், வணிக வளாகங்களில் ஏற்கனவே இயங்கி வரும் வழிபாட்டுத் தலங்களை இது எந்த வகையிலும் பாதிக்காது என்றும் அவர் சொன்னார்.

தவிர, இனிமேல் உருவாக்கப்படும் ஒவ்வொரு புதிய குடியிருப்புப் பகுதிகளிலும் முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கென பிரத்யேக நிலங்கள் அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இப்புதிய வழிகாட்டிகள் குறித்து பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் Lee Chean Chung முன்னதாகக் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இந்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

​இதனிடையேல், இந்த வழிகாட்டி நெறிமுறைகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அமுல்படுத்தப்படவில்லை என்றும், இது குறித்து ஜூன் மாத தொடக்கத்தில் சமய அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Ng Sze Han தெரிவித்துள்ளார்.

அதுவரை எந்தவொரு அமுலாக்க நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!