
புத்ராஜெயா, செப்டம்பர்-26 – புத்ராஜெயாவில் Green Flats என அழைக்கப்படும் புத்ரா ஹார்மோனி அடுக்குமாடி குடியிருப்பில் குடிநுழைவு இலாகா நடத்திய அதிரடிச் சோதனையில், உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த 84 வெளிநாட்டினர் கைதுச் செய்யப்பட்டனர்.
பொது மக்களின் புகார்கள் மற்றும் உளவுத் தகவல்களின் அடிப்படையில், Ops Pintu நடவடிக்கையின் கீழ் இரண்டு கட்டங்களாக இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 60 அதிகாரிகள் பங்கேற்ற இந்த நடவடிக்கையில், மொத்தம் 321 பேர் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களில் 73 ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 84 பேர் குடிநுழைவுச் சட்ட விதிமீறல்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை மையப்படுத்தி நடத்தப்பட்ட இந்த சோதனையைத் தொடர்ந்து, வீட்டு உரிமையாளர்கள் தங்களது குடியிருப்புகளை வாடகைக்கு விடும்போது வெளிநாட்டு வாடகையாளர்களின் விசா மற்றும் சட்டப்பூர்வ ஆவணங்களை முறையாகச் சரிபார்க்க வேண்டும் என குடிநுழைவு இலாகா மீண்டும் எச்சரித்துள்ளது.



