
பாலிங், மே 8 -ஜாலான் பாரு கூலிம் -பாலிங்-கெரிக், Kampung Sadek சாலை சந்திப்புக்கு முன், பெற்றோருடன் பயணித்த பெரோடுவா மைவி கார் ஒரு லோரியுடன் மோதியதில், ஐந்து மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.
நேற்றிரவு மணி 10.32 க்கு நிகழ்ந்த இந்த விபத்தில் அந்த குழந்தை பாலிங் மருத்துவமனையில் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
27 வயது உள்ளூர்வாசி ஒருவர் தனது 41 வயது மனைவி மற்றும் அவர்களது குழந்தையுடன் கெரிக்கிலிருந்து குப்பாங்கை நோக்கி காரை ஓட்டிச்சென்றபோது கிளந்தானிலிருந்து பினாங்கை நோக்கிச் சென்ற சந்தேகப் பேர்வழி ஓட்டிச் சென்ற லோரி மோதியதாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan பிரண்டன் ரிச்சர்ட் ஜோ ( Brandon Richard Joe) தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காயத்திற்குள்ளான கார் ஓட்டுநர், அவரது மனைவி மற்றும் குழந்தை சிகிச்சைக்காக பாலிங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
காரின் முன் இருக்கையில் தனது தாயாருடன் அமர்ந்திருந்த குழந்தை தலையில் கடுமையாக காயத்திற்குள்ளானதை தொடர்ந்து சிகிச்சையின்போது இறந்தததாக Brandon Richard Joe கூறினார்.
43 வயதுடைய லோரி ஓட்டுநர் சிறுநீர் பரிசோதனையில் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பதற்காக அறிகுறி கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைக்கு உதவும் பொருட்டு திங்கட்கிழமைவரை நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.



