
கோலாலாம்பூர், ஏப்ரல்-29-சித்ரா பௌர்ணமி திருவிழாவுக்கு கோலாகலமாகத் தயாராகி வருகிறது போர்ட் கிள்ளான் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி ஆலயம்.
நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட இந்த ஆலயத்தின் திருவிழா ஏற்பாடுகள் குறித்துத் தலைவர் Dr முருகா செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.
நாளை இரவு 10.30 மணியளவில் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்திலிருந்து காவடி ஊர்வலம் தொடங்குகிறது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 4:30 மணிக்கு ருத்ராபிஷேக பூஜையைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகளை ஏந்தி தங்களின் நேர்த்திக்கடன்களைச் செலுத்துவர் என்றார் அவர்.
மே தின விடுமுறை நாளில் இவ்விழா அமைவதால், சுமார் 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக அர்ச்சனைகளை முன்கூட்டியே தொடங்குவது உட்பட, பக்தர்களின் வசதிக்கு முன்னுரிமைக் கொடுக்கப்படும் என, ஆலயச் செயலாளர் கூறினார்.
இவ்வேளையில் திருவிழாவை ஒட்டி ஆலய நிர்வாகம் வைத்துள்ள சில கோரிக்கைகள் குறித்து கிள்ளான் அரச மாநகர மன்ற உறுப்பினர் அருள்நேசன் ஜெயபாலன் விவரித்தார்.
வரும் சனிக்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக முருகப் பெருமானின் இரத ஊர்வலம் நடைபெறும்.
வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் நமது கலை மற்றும் கலாச்சாரத்தைப் பின்பற்றி நேர்த்திக்கடன்களைச் செலுத்துமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.



