
போர்ட்டிக்சன், ஜூன் 4 – போர்ட்டிக்சன் கடற்பகுதியை பயன்படுத்தி படகு மூலம் இந்தோனேசியாவுக்கு போதைப்பொருள் கடத்திய சர்வதேச கும்பலின் நடவடிக்கையை போலீசார் முறியடித்துள்ளனர்.
நேற்று அதிகாலை கம்போங் குவாலா லுக்குட் (Kampung Kuala Lukut) மற்றும் தஞ்சோங் அகாஸ் (Tanjung Agas) பகுதிகளில் நடத்தப்பட்ட இரண்டு சோதனை நடவடிக்கைகளில், மொத்தம் 1.44 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முதல் சோதனையில், படகில் இருந்த 30 மற்றும் 34 வயதுடைய இரு இந்தோனேசிய ஆண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 12 கிலோகிராம் எடை மற்றும் 600,000 ரிங்கிட் மதிப்பிலான ஷாபு வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், போலீசாரிடமிருந்து தப்பிச் சென்ற உள்ளூர் ஆண் ஒருவர் பயன்படுத்திய காரில் 14.4 கிலோகிராம் எடை மற்றும் 744,000 ரிங்கிட் ஷாபு கண்டுபிடிக்கப்பட்டது.அதே நேரத்தில், 100,000 ரிங்கிட் மதிப்புள்ள கெட்டமின் போதைப்பொருள் கலந்த 100 வேப் திரவக் குப்பிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
தப்பியோடிய 42 வயது சந்தேகநபருக்கு போதைப்பொருள் தொடர்பான ஆறு முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



