Latestமலேசியா

உலக சந்தைப்படுத்தல் உச்சநிலை மாநாட்டில் மலேசியாவின் இளைய குழு உறுப்பினராகப் பெருமை சேர்த்த தனேஷ் ராஜ்

கோலாலம்பூர், நவ 12-மலேசியா 2026 உலக சந்தைப்படுத்தல் உச்சநிலை மாநாட்டில் மலேசியாவைப் பிரதிநிதித்த மிக இளைய குழு உறுப்பினராகவும், ஒரே இந்தியப் பிரதிநிதியாகவும் தனேஷ் ராஜ் நாகராஜன் பெருமை சேர்த்துள்ளார். அது மலேசிய இந்திய இளைஞர் தலைமைத்துவத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவிற்குத் திரும்பிய அந்த அனைத்துலக உச்சநிலை மாநாடு, நவம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. அம்மாநாட்டை, துணைப் பிரதமர் Datuk Seri Fadillah Yusof அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். நவீன சந்தைப்படுத்தலின் தந்தை எனப் போற்றப்படும் பேராசிரியர் Philip Kotler அம்மாநாட்டின் தோற்றுநர் ஆவர்.

‘புதிய யுக தொழில்நுட்பம்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற அம்மாநாடு, தொழில்நுட்பம், தலைமைத்துவம், உத்திசார் தகவல் தொடர்பு மற்றும் பங்குதாரர்களின் நம்பிக்கை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்க அனைத்துலக மற்றும் உள்நாட்டு வணிகத் தலைவர்களை ஒன்றிணைத்தது.

அம்மாநாட்டில் Berjaya Mega Motors நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் Boss James, Telenor Asiaவின் மூத்த துணைத் தலைவர் Irfan ul Wahab Khan, POS Malaysia தலைமைச் செயல்முறை அதிகாரி, ஆர்டிஎம் தலைமை இயக்குநர் Datuk Ashwad Ismail உள்ளிட்ட பல தொழில்துறைப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதில், மாஜு கல்வி மேம்பாட்டு நிறுவனத்தின் (MIED) பெருநிறுவன உத்தி மற்றும் ஊடகத் தொடர்பு இயக்குநரான தனேஷ் ராஜ், உத்திசார் தகவல் தொடர்பு, பங்குதாரர் ஈடுபாடு மற்றும் நிறுவனங்களில் நம்பிக்கையை உருவாக்குதல் தொடர்பான குழு விவாதத்தில் பங்கேற்றார். தொழில்நுட்பம் சார்ந்துவரும் சூழலில் தலைமைத்துவப் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணுவதன் அவசியம் குறித்து அவர் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

அம்மாநாட்டில் பங்கேற்ற குழுப் பேச்சாளர்களில் மிக இளையவராகவும், ஒரே இந்தியப் பேச்சாளராகவும் அவர் திகழ்ந்தார். அதன் மூலம், அனைத்துலக மற்றும் மலேசியத் தொழில்துறைத் தலைவர்களுடன் ஒரே மேடையில் தனது கருத்துகளை முன்வைக்கும் வாய்ப்பை அவர் பெற்றார்.

தனேஷ் ராஜின் இந்தப் பங்கேற்பு மலேசிய இந்திய சமூகத்திற்குப் பெருமை சேர்த்திருப்பதுடன், இளம் தொழில் வல்லுநர்களும் அனைத்துலக அளவிலான வணிகம், சந்தைப்படுத்தல் மற்றும் தலைமைத்துவ உரையாடல்களில் முக்கியப் பங்களிக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!