Latest

மத நம்பிக்கைகளை அரசியல் ஆயுதமாக்கக் கூடாது; சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு ‘மஹிமா’ கடும் கண்டனம்

கோலாலம்பூர், மே-16,

‘சனாதன தர்மம்’ குறித்து தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் கூறிய அரசியல் கருத்துகள், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக, மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பேரவையான மஹிமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

​இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மஹிமா தலைவர் டத்தோ என். சிவகுமார், மத நம்பிக்கைகளை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது என்றும், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அடுத்தவர் மதத்தை இழிவுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை என்றும் கூறினார்.

உதயநிதி ஸ்டாலினின் இத்தகைய பேச்சுக்கள் உலகளாவிய இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியுள்ளதாக அவர் சாடினார்.

​சமூக சீர்திருத்தம் மற்றும் சமத்துவம் குறித்து விவாதிப்பதில் தவறில்லை, ஆனால் அந்த விவாதங்கள் மற்ற சமூகங்களை மதிக்கத்தக்க வகையில் முதிர்ச்சியோடு நடத்தப்பட வேண்டும் என்று டத்தோ சிவகுமார் சுட்டிக்காட்டினார்.

​தற்போது முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு அரசு, மத உணர்வுகளைத் தூண்டி பிரிவினையை ஏற்படுத்தாமல், பொருளாதார வளர்ச்சி, கல்வி, மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு போன்ற மக்கள் நலத்திட்டங்களில் தங்களின் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆட்சியை இழந்து, எதிர்கட்சியானாலும், சனாதன தர்மத்துக்கு எதிராக திமுக தொடர்ந்து முழங்கும் என உதயநிதி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!