சிகாம்புட், ஜூலை-17 – இணையப் பகடிவதையின் மூலம் சமூக ஊடக பிரபலம் ஏஷாவின் தற்கொலைக்குத் தூண்டிய பெண்ணுக்கு, நீதிமன்றம் வெறும் 100 ரிங்கிட் அபராதம் மட்டுமே விதித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
அதே சமயம், சூப்பர் மார்க்கெட்டில் மதுபான பாட்டில்களையும் ரொக்கப் பணத்தையும் திருடியதற்காக, அடுத்த மாதம் திருமணம் செய்துக் கொள்ளவிருக்கும் நபரென்றும் பாராமல் தெலுக் இந்தானில் ஓர் ஆடவருக்கு 4 ஆண்டுகள் சிறையும் 1 பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளது.
இது தமக்கு பெரும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளதாக, சிகாம்புட் ம.இ.கா தொகுதி காங்கிரஸ் தலைவர் டத்தோ என்.சிவகுமார் (DATO’ N. SIVAKUMAR) கூறினார்.
ஏஷா விஷத்தில் உடனடியாகக் களமிறங்கி, சந்தேக நபர்களைக் கைது செய்த போலீசாரின் நடவடிக்கை உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
அதில் நீதிமன்றமும் நடப்பு சட்டத்திட்டங்களுக்குட்பட்டே செயல்பட்டுள்ளது என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.
என்றாலும், ஏஷாவின் உயிர் பறிபோன விஷயத்தில் சம்பந்தப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை போதுமானதாக இல்லை.
எனவே, Akta 336 என சுருக்கமாக அழைக்கப்படும் சிறியக் குற்றங்களுக்கான சட்டத்தை அரசாங்கம் திருத்தியாக வேண்டும்.
எல்லா குற்றங்களுக்கும் ஒரு பொதுவான சட்டமாக அது இனியும் பயன்படுத்தப்படக் கூடாது என, Dinamik Sinar Kasih Malaysia நலச் சங்கத்தின் தலைவரும் புரவலருமான டத்தோ சிவகுமார் வலியுறுத்தினார்.
ஓர் உயிரே போயிருக்கிறது.
இருந்தும், 336-வது சட்டப் பிரிவின் கீழ் இணையப் பகடிவதை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது ஏன் என்பது எனக்கு இன்னும் விளங்கவில்லை என்றார் அவர்.
எனவே இணையப் பாதுகாப்புச் சட்டத்தை சீக்கிரமே இயற்றி, அதனை மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையில் அரசாங்கம் நிறைவேற்றிட வேண்டும்.
இன்னொரு ஏஷாவை இழக்கும் வரை நாம் காத்திருக்க முடியாது என டத்தோ சிவகுமார் கேட்டுக் கொண்டார்.