Latestமலேசியா

மத்திய கிழக்கு பயணங்களை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து

புத்ராஜெயா, மார்ச்-1-மத்திய கிழக்கு பகுதிகளுக்கு அவசரமற்ற – அவசியமற்றப் பயணங்களை மலேசியர்கள் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு, வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அறிவுறுத்தியுள்ளது.

ஈரானில் அமெரிக்கா – இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களால் மத்தியக் கிழக்கு நாடுகளிலும் பாதுகாப்பு சூழ்நிலை மிகவும் பதற்றமாகியுள்ளது.

இதனால், பல விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டு, மலேசியர்கள் அங்கு சிக்கித் தவிக்கின்றனர்.

விஸ்மா புத்ரா, தூதரகங்கள் மூலம் அவர்களுக்கு உதவி செய்து வரும் நிலையில், பயணிகள் தத்தம் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு புதிய அட்டவணைகளை உறுதிப்படுத்த வேண்டுமென அது அறிவுறுத்தியுள்ளது.

தற்போதைக்கு சவூதி அரேபியா, சிரியா, ஜோர்டான், ஐக்கிய அரபு சிற்றரசு உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்தியக் கிழக்கில் உள்ள மலேசியர்கள் திரையில் காணும் இந்த https://ekonsular.kln.gov.my முகவரியில் பதிந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஆபத்து அவசர நேரங்களில் அதிகாரிகள் தொடர்கொள்ளவும், உதவிகள் வழங்கவும் இது உதவியாக இருக்குமென, விஸ்மா புத்ரா கூறியது.

மலேசியர்களின் பாதுகாப்பும் நலனுமே முன்னுரிமை என அது கூறிற்று.

அமெரிக்க – இஸ்ரேலியப் படைகளின் தாக்குதலில் ஈரானிய உச்சத் தலைவர் ஆயதொலா அலி கமேனி கொல்லப்பட்டுள்ள நிலையில் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

ஈரானியப் படைகளும் பதில் தாக்குதல் நடத்துவதால், அண்டை நாடுகளிலும் நிலைமை மோசமாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!