
இந்தூர், மத்தியப் பிரதேசம், செப்டம்பர் 3 – மத்தியப் பிரதேசம் இந்தூர் நகரில் இருக்கும் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் (NICU) கடந்த 48 மணி நேரத்தில் இரண்டு குழந்தைகளை எலி கடித்த காணொளி வலைத்தளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு குழந்தையின் விரல் மற்றும் இன்னொரு குழந்தையின் தலை மற்றும் தோள்பகுதியிலும் எலி கடித்துள்ளதென்று அறியப்படுகின்றது.பிறவிக் குறைபாடுகளுடன் இருந்த இரண்டு குழந்தைகளும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக 24 மணி நேர கண்காணிப்பு உத்தரவிடப்பட்டதுடன், மருத்துவமனை சாளரங்களில் இரும்பு வலைகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் சம்பவம் குறித்து பலரும் பல விமர்சனங்களை முன் வைத்ததைத் தொடர்ந்து மருத்துவமனை உயிர்களை காப்பதற்கான இடமாக இருக்க வேண்டுமே தவிர, அது மரண களமாக மாறக்கூடாது என்ற கருத்து பரவலாக பரவி வருகிறது.