
கங்கார், செப்.14 – பெர்லிஸ், Taman Senaவில் வாகன நிறுத்திமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Perodua Alza காரின் மீது மரம் விழுந்து கார் நொறுங்கியதில் குடும்பமொன்று நூலிழையில் உயிர் தப்பியது. அந்த எதிர்பாரா சம்பவத்தில் தமது கணவர், இரு பிள்ளைகளைத் தவிர்த்து தாமும் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டமே என 37 வயதான Ros Ayu Ismail எனும் மாது குறிப்பிட்டார். சில நொடிகள்தான். மரணத்தின் விளிம்பிற்கே சென்று திரும்பியது போல் இருந்ததாக அவர் திகிலுடன் கூறினார்.
நேற்று பிற்பகலில் காரை நிறுத்தி வைத்து விட்டு Ros Ayu கணவருடன் பொருட்களை வாங்கி விட்டுக் காருக்குத் திரும்பியிருக்கிறார். பொருட்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என அவர் கணவரிடம் கேட்கத் திரும்பிய சமயத்தில்தான் அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மரம் விழுந்தபோது அவரது 6 வயது மகன்காரின் முன்பகுதியில் இருந்து கணவர் கொடுத்த சாக்லேட்டை வாங்குவதற்காக தற்செயலாக பின்புற இருக்கைக்கு மாறியிருந்திருக்கிறார். அவரது மகள் ஏற்கனவே பின்புற இருக்கையில் அமர்ந்திருந்தார். மரம் காரின் மீது விழுந்தவுடன், முன்புற ஓட்டுநர் மற்றும் பயணியர் பகுதி முற்றிலும் நொறுங்கியதால், பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்திருக்கும் என பயந்த Ros, பின்னர் சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களின் உதவியுடன், இரு பிள்ளைகளையும் காரின் பின்புறப் பகுதியான பூட் வழியாக பாதுகாப்பாக வெளியேற்றினார்.
அச்சம்பவம் கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்ததாகக் கூறிய அவர், மரம் விழுந்த காட்சியும் கண்ணாடிகள் உடைந்த சத்தமும் தொடர்ந்து நினைவில் வந்து கொண்டிருப்பதாகவும், தாமும் பிள்ளைகளும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை எனவும் குறிப்பிட்டார். சம்பவத்துக்குப் பிறகு சிறிது நேரம் அழுத பிள்ளைகள் தற்போது நலமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
அச்சம்பவத்தில் Ros Ayuவின் கார் கடுமையாக சேதமடைந்தது. அந்த கார் இன்னும் கடன் தவணையில் இருப்பதாகவும், மேலதிக பரிசோதனைக்காக விரைவில் பழுதுபார்க்கும் பட்டறைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அச்சம்பவத்தில் Perodua Ativa காரொன்று சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.



