
மலாக்கா, மே-30-மலாக்காவில் அடுக்குமாடி கடை வீட்டொன்றில் அடையாளம் தெரியாத சடலமொன்று மெத்தையால் சுற்றப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில், புதியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
Pokok Mangga, Kampung Padang-ஙில் உள்ள அந்த கடை வீட்டின் மேல் தளத்திற்கு, நள்ளிரவு வேளையில் மிகக் கவர்ச்சியான ஆடைகளை அணிந்திருந்த 2 மர்மப் பெண்கள் உட்பட மூவர் ஏறிச் சென்றதாக, நேரில் பார்த்த சாட்சியான அண்டை வீட்டார் வாயிலாகத் தெரிய வந்துள்ளது.
சுவாசக் கவசம் அணிந்திருந்த அப்பெண்களின் நடவடிக்கை சற்று சந்தேகமளிக்கும் வகையிலிருந்ததாக, பெயர் குறிப்பிட விரும்பாத 42 வயது அண்டை வீட்டுக்காரர் கூறினார்.
அவர்கள் அங்குச் சென்று வந்த சில மணி நேரங்களில்தான் இந்த மர்ம மரணம் நிகழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
அங்கு வந்து சென்ற அந்த இரு பெண்களின் நடமாட்டத்திற்கும், இந்த மர்ம மரணத்திற்கும் ஏதேனும் நேரடித் தொடர்புகள் இருக்கிறதா என்ற புதிய கோணத்தில் மாவட்ட போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்தில் உள்ள CCTV கேமரா காட்சிகளைத் திரட்டியுள்ள போலீஸார், அந்த மர்மப் பெண்கள் யார் என்பதை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
முன்னதாக, வாடகைக்குத் தங்குவதற்காக அந்த கடை வீட்டுக்குச் சென்ற ஆடவர், கதவைத் திறந்ததும், உள்ளே கடுமையான துர்நாற்றம் வீசியதால் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் தகவலறிந்து வந்த போலீஸார், உள்ளே மெத்தையால் சுற்றப்பட்ட நிலையில் அழுகிய சடலத்தை மீட்டனர்.
இதுவரை ஒரு சந்தேக நபர் கைதாகியுள்ளார்.



