
மலாக்கா, ஜாசின், ஆகஸ்ட் 11 – தாமான் மாஜுவிலுள்ள ஒரு கடையில் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆயுத முனையில் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் 44 மற்றும் 45 வயதுடைய இரு ஆண்களை போலீசார் கைது செய்தனர்.
நேற்று மாலை 4.30 மணியளவில் ஜாசின் மற்றும் ஜோகூர், தங்காக் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தனித்தனி நடவடிக்கைகளில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், 44 வயது நபர் மோட்டார் சைக்கிளை ஓட்டி கடைக்கு வெளியே காத்திருந்ததும், 45 வயது நபர் கத்தியைக் காட்டி கடைக்குள் கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இருவரும் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
அவர்களிடமிருந்து 3 கையடக்கத் தொலைபேசிகள், 2 தலைக்கவசங்கள், ஒரு கத்தி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் இருவருக்கும் ஏற்கெனவே குற்றப் பதிவுகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



