
மலாக்காவில் 2025ஆம் ஆண்டு தொடங்கப்படாமல் இருந்த 55 வளர்ச்சித் திட்டங்களின் தற்போதைய நிலை என்ன எனக் மாநில முதல்வரிடம் கேள்வி எழுப்பியுள்ளார் கெஅடிலான் துணைப் பொதுச் செயலாளர் சிவமலர் கணபதி.
தேர்தலில் மக்களிடம் அடுத்த 5 ஆண்டுக்கான ஆதரவை நாடுவதற்கு முன் அவற்றின் முன்னேற்றம் குறித்து மாநில அரசு தெளிவான விளக்கமளிக்க வேண்டும் என சிவமலர் வலியுறுத்தியுள்ளார்.
கிட்டத்தட்ட 17 மாதங்களுக்கு முன்பு, மலாக்கா முதல்வர் டத்தோஸ்ரீ அப்துல் ரவூப் யூசோ, மாநிலத்தின் 241 வளர்ச்சித் திட்டங்களில் 86 முடிக்கப்பட்டதாகவும், 100 செயல்பாட்டில் இருந்ததாகவும், 55 இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் அறிவித்திருந்தார்.
அந்த 55 திட்டங்களில் எத்தனை தொடங்கப்பட்டுள்ளன, எத்தனை முடிக்கப்பட்டுள்ளன, இன்னும் எத்தனை தாமதத்தில் உள்ளன என்பதை மக்கள் அறிய விரும்புவதாக சிவமலர் தெரிவித்தார். திட்டங்கள் தாமதமாவது, அவற்றை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களுக்குத் தேவையான வசதிகள் கிடைப்பதையும் பாதிக்கலாம் என்றார்.
2025 மே 31 நிலவரப்படி, RM88 மில்லியன் வளர்ச்சி ஒதுக்கீட்டில் RM19.52 மில்லியன் மட்டுமே செலவிடப்பட்டதாகவும், இது 22.18 விழுக்காடு என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, திட்டங்களின் தற்போதைய நிலை மட்டுமன்றி, ஒதுக்கப்பட்ட, வழங்கப்பட்ட மற்றும் செலவிடப்பட்ட நிதி விவரங்களையும் அரசு வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
திட்டங்களின் பெயர், இடம், ஒதுக்கீடு, பொறுப்பு வகிக்கும் அமைப்பு, தற்போதைய நிலை மற்றும் நிறைவு இலக்கு உள்ளிட்ட விவரங்களைப் பகிர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“திட்டங்கள் முடிந்திருந்தால், அதன் பலனை மக்களுக்குக் காட்டுங்கள். தாமதமாகியிருந்தால், காரணத்தையும் தீர்வுத் திட்டத்தையும் விளக்குங்கள்,” எனக் கூறிய சிவமலர், புதிய ஐந்தாண்டுக்கான ஆதரவை நாடும் முன், முந்தைய நிர்வாகத்தின் செயல்பாடுகளை மக்கள் மதிப்பிடத் தேவையான தகவல்கள் வெளிப்படையாக வழங்கப்பட வேண்டும் என்றார்.



