கோலாலம்பூர், அக்டோபர் 7 – நேற்று மலாயா பல்கலைக்கழகத்தில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தேசிய தேர்வு நடைபெற்றது.
தமிழ்ப்பள்ளி மற்றும் தேசியப்பள்ளியைச் சேர்ந்த ஆறாம் ஆண்டு மாணவர்கள், படிவம் 1, படிவம் 3, எஸ்.பி.எம் மாணவர்கள் என ஏறக்குறைய 600 மாணவர்கள் இத்தேர்வில் அமர்ந்தனர்.
தேர்வுகளுக்குத் தயார் செய்வதன் வாயிலாகக் கிடைக்கப்பெறும் நன்மைகளிலிருந்து மாணவர்கள் விடுபடாக் கூடாது என்பதற்காகவே இரண்டு மாதங்களாகச் செயல்பட்டு இந்த தேசிய தேர்வை நடத்தியதாக ஸ்ரீ முருகன் நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா தெரிவித்தார்.
அரசாங்கம், UPSR, PT3 ஆகிய தேர்வுகளை அகற்றினாலும், அரசாங்கத் தேர்வுகளுக்குத் தயார்ப்படுத்தும் வகையில் ஸ்ரீ முருகன் நிலையம் மாணவர்களுக்குத் தேசிய மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற தேர்வு தாள்களை முறையே தாயார் செய்து தேர்வுகளை நடத்தியது.
நாடு தழுவிய நிலையில் நடைபெற்ற இத்தேர்வில் கோலாலம்பூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, பேராக் ஆகிய 5 மாநிலங்களிலிருந்து மாணவர்கள் பங்கெடுத்தனர்.
தேசிய அளவில் நடைபெற்ற இத்தேர்வில் மாணவர்கள் தங்களை முழுமையாகத் தயார்ப்படுத்தித் தேர்வை எதிர்நோக்கியதாக, இவ்வாறு மாணவர்களும் பெற்றோர்களும் வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டனர்.
மலாயா பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து, பினாங்கு மாநிலத்திலும் ஜோகூரிலும் இத்தேர்வுகள் நடைபெறவுள்ளன.
நாடு முழுவதும் ஏறக்குறைய இந்த தேசிய தேர்வை 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவர் என அதன் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ கணேஷ் கூறினார்.
இத்தேர்வின் முடிவில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ முருகன் நிலையத்தின் தோற்றுநர் டான் ஸ்ரீ எம். தம்பி ராஜா அவர்கள் கலந்து, மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் உரை வழங்கி தேர்வை நிறைவு செய்தார்.