
கோலாலம்பூர், ஆகஸ்ட்-25-மலேசியாவில் புகைமூட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் 32 பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேடு குறியீட்டு அளவு (API) ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.
சுற்றுச்சூழல் துறையின் APIMS தரவுகளின்படி, சிலாங்கூரில் ஷா ஆலாம், நெகிரி செம்பிலானில் சிரம்பான் மற்றும் பேராக்கில் தைப்பிங் உள்ளிட்ட பல பகுதிகள் 100-க்கும் மேற்பட்ட ஆரோக்கியமற்ற குறியீட்டு அளவை பதிவுச் செய்துள்ளன.
காற்றின் தரக் குறியீடு 101 முதல் 200 வரை இருப்பது ஆரோக்கியமற்ற அளவாகக் கருதப்படுகிறது.
எனவே, பொது மக்கள் வெளிப்புற உடற்பயிற்சிகள் மற்றும் நடமாட்டங்களைக் குறைத்துக் கொள்ளுமாறும், வெளியே செல்லும் போது முகக்கவசம் அணியுமாறும், போதுமான அளவு தண்ணீர் குடிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.



