புது டெல்லி, ஏப்ரல் 24 – இந்தியா, புது டெல்லியில் மலைப் போல் ‘வளர்ந்து’ நிற்கும் காஜிப்பூர் குப்பை மேட்டில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால், அடர்த்தியான் கரும்புகை வானத்தைச் சூழ்ந்துள்ளது.
இதனால் காஜிப்பூர் பகுதி வாழ் மக்கள் நச்சுப்புகையால் மூச்சுத் திணறி வருகின்றனர்.
புகையால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதோடு கண்களிலும் எரிச்சல் ஏற்படுவதாக சுற்றுப்புற மக்கள் புகார் தெரிவித்தனர்.
இது மக்கள் மத்தியிலும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வெப்பம் மற்றும் வறண்ட வானிலையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படும் வேளை, மலைக் கழிவுகளில் உற்பத்தியான வாயுக்களால் குப்பைக் கிடங்கில் தீ ஏற்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறை கூறுகிறது.
இந்த காஜிப்பூர் குப்பைக் கிடங்கில் தீ ஏற்படுவது இது முதன் முறையல்ல; ஏற்கனவே 2022-ல் மூன்று தீ விபத்துகள் அங்கு ஏற்பட்டுள்ளன.
அதில் ஒரு முறை கிட்டத்தட்ட 50 மணி நேர போராட்டங்களுக்குப் பிறகே தீ அணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில், அங்கு தீ ஏற்பட்டதற்கான காரணத்தை விளக்கி, 48 மணி நேரங்களுக்குள் விரிவான அறிக்கைத் தருமாறு, டெல்லி மாநில அரசு தனது சுற்றுச் ஊழல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
அதோடு, வெயில் காலத்தில் இது போன்ற குப்பைக் கிடங்குகளில் தீ ஏற்படாமல் தடுப்பதற்கான செயல் திட்டத்தையும் தாக்கல் செய்யுமாறு அது கேட்டுக் கொண்டது.