வாஷிங்டன் – நவம்பர்-14 – அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்வாகியுள்ள டோனல்ட் டிரம்ப், வெள்ளை மாளிகைக்கு அதிரடியாகத் திரும்பி அதிபர் ஜோ பைடனைச் சந்தித்துள்ளார்.
இருவரும் கைக்குலுக்கி பரஸ்பரம் பரிமாறிக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
அச்சந்திப்பின் போது, பைடன் அதிகாரப் பரிமாற்றம் சுமூகமாக நடைபெறும் என்ற உத்தரவாதத்தை டிரம்ப்பிடம் வழங்கினார்.
புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மரியாதை நிமித்தமாக நடப்பு அதிபரை வெள்ளை மாளிகையில் சென்று காண்பது வழக்கமாகும்.
என்னதான் தேர்தலின் போது கடுமையாக மோதிக் கொண்டாலும், தேர்தலுக்குப் பிறகு நாடு ஒன்றுபட வேண்டுமென்பதை முன்னிறுத்தி காலம் காலமாக தலைவர்கள் கடைபிடிக்கும் நாகரீகம் அதுவாகும்.
ஆனால் 2020 தேர்தலில் பைடனிடம் தோல்வி கண்டதை டிரம்ப் ஒப்புக் கொள்ள மறுத்ததால் அந்த பாரம்பரியம் தடைபட்டது.
நான்காண்டுகளுக்கு முன் டிரம்ப் அந்த ‘மரியாதையை’ தனக்கு வழங்காமல் போனாலும், 81 வயது பைடன் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் இன்று வெள்ளை மாளிகையின் பாரம்பரியத்தை நிலை நிறுத்தியுள்ளார்