
பெட்டாலிங் ஜெயா,தனது 12 வயது மகன் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்ஏசிசி தலைமையகத்துக்கு அழைக்கப்பட்ட விவகாரத்தில், அந்த ஆணையம் அளித்த விளக்கம் “முற்றிலும் முரணானது மற்றும் நியாயமற்றது” என முன்னாள் மனிதவள அமைச்சர் எம். சரவணன் விமர்சித்துள்ளார்.
முதலாவதாக ஒரு சிறுவனை இந்த விவகாரத்தில் ஈடுபடுத்த வேண்டிய அவசியமே இல்லை என்றும் அவர் கூறினார்.
விசாரணைக்கு விரிவான அதிகாரங்கள் கொண்ட ஒரு அமைப்பு, 12 வயது சிறுவன் தொடர்பில் அடிப்படை விவேகத்தையும் பொது அறிவையும் பயன்படுத்தத் தவறியது மிகவும் வருத்தமளிப்பதாக சரவணன் தெரிவித்தார்.
“குழந்தைகளை வீட்டில் பார்த்துக்கொள்ள யாரும் இல்லை; அதனால் அவர்கள் வழக்கம்போல் பெற்றோருடன் வந்தனர்” என எம்ஏசிசி தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் கூறியிருப்பது, பொருத்தமற்ற விளக்கம் என்பதோடு உண்மையான கேள்வியைத் தவிர்க்கும் வகையிலும் உள்ளதாக சரவணன் சாடினார்.
ஒரு சிறுவனை அதிகாரப்பூர்வ விசாரணை நடைமுறைக்காக ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்துக்கு வரவழைத்ததன் நிர்வாகத் தவற்றிலிருந்து இந்த விளக்கம் திசை திருப்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறுவனின் வயதையும் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு எம்ஏசிசி தனது அதிகாரத்தை பயன்படுத்தி, சரவணனின் 12 வயது மகனுக்கு சொத்து விவர அறிவிப்பு வழங்கப்படவில்லை என்று முன்னதாக அப்துல் ஹலிம் தெரிவித்திருந்தார்.
சரவணனின் மகன் எம்ஏசிசி தலைமையகத்துக்கு வந்தது, விசாரணை தொடர்பான நோட்டீஸைப் பெறுவதற்காக அல்ல; பெற்றோரோடு உடன் வந்தது மட்டுமே என்றும் அவர் விளக்கமளித்தார்.
ஆனால், இந்த விவேகத்தை ஏன் எம்ஏசிசி ஆரம்பத்திலேயே பயன்படுத்தவில்லை என சரவணன் கேள்வி எழுப்பினார். மகனுக்கு நோட்டீஸை நேரில் வழங்க முயன்றது, நியாயமான அமலாக்கத்தின் எல்லையை மீறிய செயல் என்றும் அவர் கூறினார்.
சொத்து விவர அறிவிப்பு நோட்டிஸ் ஏதேனும் வழங்க வேண்டியிருந்தால், அதைத் தனது மகனிடம் நேரில் அல்லாமல் பெற்றோர் என்ற முறையில் தன் மூலமாக வழங்கியிருக்க முடியும் என்றும் சரவணன் வலியுறுத்தினார்.



