Latestமலேசியா

தமிழக இலக்கிய மேடையில் ஒலித்த மலேசிய படைப்பு; ‘தலேஜூ’ நாவலுக்காக கே. பாலமுருகனுக்கு சிறந்த நாவல் விருது!

சென்னை, அக்- 1 – மலேசிய மண்ணில் உருவான ஒரு தமிழ் நாவல், தமிழகத்தின் இலக்கிய மேடையில் தனக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. மலேசிய எழுத்தாளர் கே. பாலமுருகனின் ‘தலேஜூ’ நாவலுக்கு, சென்னையில் நடைபெற்ற 11ஆம் ஆண்டு படைப்பு சங்கமம் விருது விழாவில் ‘சிறந்த நாவல் விருது – 2026’ வழங்கப்பட்டது.

கெடாவைச் சேர்ந்த கே. பாலமுருகன், ஆசிரியர் பணியுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகிலும் பயணித்து வருகிறார். சிறுகதை முதல் நாவல் வரை, சிறார் இலக்கியம் முதல் ஹைக்கூ வரை பல்வேறு தளங்களில் தொடர்ந்து தனது எழுத்தைப் பதிவு செய்து வருகிறார்.

அவரது முதல் நாவல் வெளியாகி சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் உருவான இரண்டாவது நாவல்தான் ‘தலேஜூ’. கொரோனா காலத்தில் மனிதர்கள் சந்தித்த தனிமை, பிரிவு, மரண அச்சம், பொருளாதார நெருக்கடி, உறவுகளின் விரிசல், சந்திக்க முடியாத காதல்கள் என பல வாழ்க்கை அனுபவங்களை இந்த நாவல் கதைக்குள் கொண்டுவருகிறது.

குறிப்பாக பெண்களின் வாழ்க்கையும் அவர்களின் அனுபவங்களும் நாவலின் முக்கிய களமாகின்றன. ‘தலேஜூ’ என்ற பெயரும் நேபாள மன்னர் காலத்தைச் சார்ந்த பெண் தெய்வக் குறியீட்டிலிருந்து தொடங்கி, நாவலின் மையப் படிமமாக விரிகிறது.

இந்த நாவலின் பயணத்திலேயே மலேசியா–தமிழ்நாடு இலக்கியத் தொடர்பும் இணைந்துள்ளது. தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு வந்த பதிப்புப் பணிகள், நண்பர்கள் மற்றும் பதிப்பகத்தினரின் பங்களிப்பு என பல கட்டங்களைக் கடந்து ‘தலேஜூ’ வாசகர்களின் கைகளுக்குச் சென்றடைந்ததாக பாலமுருகன் பதிவு செய்துள்ளார்.

ஒரு படைப்பு மலேசியாவில் பிறந்தது; அதன் அங்கீகாரம் இன்று தமிழகத்தில் கிடைத்துள்ளது. கே. பாலமுருகனின் நீண்டகால எழுத்துப் பயணத்திற்கு கிடைத்த மற்றொரு முக்கிய விருதாக மட்டுமின்றி, மலேசியத் தமிழ் இலக்கியத்தின் குரல் எல்லை கடந்து தமிழக இலக்கிய அரங்கிலும் தொடர்ந்து ஒலிப்பதற்கான அழகான பதிவாகவும் இந்த வெற்றி அமைந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!