
கோலாலம்பூர், பிப்ரவரி-27-பி.கே.ஆர் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லிக்கு, அக்கட்சி காரணம் கோரும் கடிதம் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுச் செயலாளர் டத்தோ Dr Fuziah Salleh கையொப்பமிட்டு கடிதம் வெளியாகியுள்ளதை, வீடியோ வாயிலாக ரஃபிசி உறுதிப்படுத்தினார்.
பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஃபிசி, 16-ஆவது பொதுத் தேர்தலில் பி.கே.ஆர் சார்பில் அல்லாமல் போட்டியிடப் போவதாக அண்மையில் அறிவித்தது, கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்ததற்கு சமமாகும் எனக் கருதி இக்கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
கட்சியின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் ரஃபிசியின் கருத்துகள் இருந்ததாக கிடைத்த புகார்களைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“ஆனால், வெறும் நோக்கத்தை வைத்து மட்டுமே நடவடிக்கை எடுத்திட முடியாது; நான் பி.கே.ஆரிலிருந்து வெளியேறுவதாக கூறவில்லையே” என தெளிவுப்படுத்திய ரஃபிசி “கடிதத்திற்கு விரைவிலேயே பதிலளிப்பேன்” என்றார்.
அவரது விளக்கத்தை ஆய்வு செய்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சி முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.



