
ஜோர்ஜ்டவுன், நவம்பர் 2 – லண்டனுக்கு 40 கிலோகிராம் கஞ்சாவைக் கடத்திச் செல்ல 9,000 ரிங்கிட் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட 28 வயது சரவாக்கைச் சேர்ந்த ஆடவர், பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 3.2 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 18ஆம் தேதி, விமானத்தில் ஏறுவதற்காகக் காத்திருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாகப் பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ டென்னிஸ் லிம் குவாங் கெங் (Dennis Lim Kwang Keng) தெரிவித்தார். மிரி நகரிலிருந்து வந்த அந்த ஆடவர், இடைத்தரகர் ஒருவரின் உத்தரவின்பேரில் போதைப்பொருளைக் கடத்திச் செல்ல ஒப்புக்கொண்டதாகவும், இது தனது முதல் கடத்தல் முயற்சி எனக் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர் அக்டோபர் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், குற்றத்தை மறுத்துள்ளார்.
இதற்கிடையில், நவம்பர் 1ஆம் தேதி ஜெலுத்தோங்கிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில், மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 1.05 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றில் சுமார் 7 கிலோகிராம் ஷாபு, கெட்டமின், எரிமின் 5 மாத்திரைகள் மற்றும் திரவ எக்ஸ்டசி ஆகியவை அடங்கும். போதைப்பொருள் பதப்படுத்தவும் விநியோகிக்கவும் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
இரு சம்பவங்களிலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது 1952ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின்கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.



