
லுக்குட், அக்டோபர்-22,நெகிரி செம்பிலான், லுக்குட்டில் கட்டடத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக நம்பப்படும் இறுதி ஆண்டு கல்லூரி மாணவரின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டது.
லுக்குட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் _practice training_ எனப்படும் நடைமுறைப் பயிற்சி மேற்கொண்டு வந்த 21 வயது அம்மாணவர், அதிகாலை 6.05 மணியளவில் உணவகத்திற்குப் பின்னால் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
போர்ட்டிக்சன் மாவட்டப் போலீஸ் தலைவர் Ahmad Afiq Adnan அதனை உறுதிப்படுத்தினார்.
உயரமான இடத்திலிருந்து விழுந்ததால் ஏற்பட்ட தலை மற்றும் வயிற்றுப் பகுதி காயங்களே மரணத்திற்கான காரணம் என்று சவப் பரிசோதனையில் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
எனினும், இதில் குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் இல்லை என போலீஸார் தெரிவித்தனர்.
மாணவர் தங்கியிருந்த மூன்றாவது மாடி அறையில் உடைப்புக்கான அடையாளங்கள் எதுவும் இல்லை என்றும் அவரது தனிப்பட்ட உடைமைகள் பத்திரமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்தச் சம்பவம் திடீர் மரணமாக வகை செய்யப்பட்டுள்ளது.
மன அழுத்தத்திலோ அல்லது சிரமங்களிலோ இருப்பவர்கள் Befrienders Kuala Lumpur அமைப்பை 03-7627 2929 என்ற எண்ணில் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.



