
ஷா ஆலாம், ஜூலை-2 – சிலாங்கூர் மற்றும் பஹாங்கில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த அமுலாக்க நடவடிக்கையில், அதிகாரிகள் வனவிலங்கு கடத்தல் கும்பலை முறியடித்து, பாதுகாக்கப்பட்ட விலங்குகள் மற்றும் சுமார் 400,000 ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
புக்கிட் அமான் போலீஸ் உதவியுடன், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான PERHILITAN மூலம் இந்த Op Bersepadu Khazanah சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஜூன் 25 முதல் 3 நாட்களில் 6 சோதனைகள் நடத்தப்பட்டதாக PERHILITAN தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் காடிர் அபு ஹாஷிம் தெரிவித்தார்.
பஹாங் தெமர்லோவில் ஒரு சாலைத் தடுப்புச் சோதனையும், மீதமுள்ள 5 சோதனைகள் கிள்ளான் மற்றும் உலு சிலாங்கூரிலும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கையின் மூலம் நூற்றுக்கணக்கான பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டன; அவற்றில் தொங்கும் கிளிகள், வெள்ளை-முதுகு கொண்ட சோலைபாடிகள், நீல-முதுகு கொண்ட கிளிகள் ஆகியவை அடங்கும்.
இது தவிர, காட்டுப்பன்றி மற்றும் சருகுமான்கள் என நம்பப்படும் காட்டு விலங்குகளின் இறைச்சிகள், 2 யானைத் தந்தங்கள், மற்றும் பிற சட்டவிரோத வேட்டை பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் 18 துப்பாக்கி தோட்டாக்கள், ஒரு கத்தி மற்றும் 3 கேமரா பொறிகளும் அடங்கும்; இவை சட்டவிரோத வேட்டைக்கு, அக்குகும்பலால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
பிடிக்கப்பட்ட காட்டுப் பறவைகள் சமூக ஊடகங்களில் விற்கப்பட்டதும், பல கும்பல்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதும் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அப்துல் காடிர் கூறினார்.