
கோலாலம்பூர், செப்-14 –தடைகளை நீக்கி, நல்வழி காட்டும் முதற்கடவுளாகப் போற்றப்படும் விநாயகப் பெருமானுக்குரிய விநாயகர் சதுர்த்தி இன்று கோலாலம்பூர் கோட்டுமலை விநாயகர் ஆலயத்தில் பக்தி உணர்வுடன் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.
விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டன. விழாவுக்கென அழகிய மலர் அலங்காரங்களால் விநாயகப் பெருமான சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது பக்தர்களை மேலும் பக்திவசமாக்கியது.
இதனிடையே, காலை முதலே திரளான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து, விநாயகப் பெருமானை தரிசித்து அருள் பெற்றனர். குடும்ப நலம், தொழில் வளர்ச்சி, கல்வி முன்னேற்றம் மற்றும் வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்க வேண்டி பலரும் மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி நன்னாளில் கோட்டுமலை விநாயகர் ஆலயத்தில் வழிபட்டது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்ததாக பக்தர்கள் வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்துகொண்டனர்.
எந்தவொரு நற்செயலையும் விநாயகரை வணங்கித் தொடங்குவது சிறப்பாகக் கருதப்படும் நிலையில், இன்று நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் மனமுருகி கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றனர்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகரை தரிசிக்க காலை முதலே பக்தர்கள் திரண்டதால், கோட்டுமலை விநாயகர் ஆலயம் முழுவதும் பக்தி உணர்வு நிறைந்திருந்தது.



