
கோலாலாம்பூர், மார்ச்-30-சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, விபத்தை ஏற்படுத்தியவர்கள் இழப்பீடு வழங்கும் பரிந்துரையைப், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் முன்வைத்துள்ளார்.
இந்த உத்தேசத் திட்டத்தின் நோக்கம், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நியாயமான நிதி உதவி வழங்குவதாகும் என்றார் அவர்.
இந்த இழப்பீடு வழங்கப்பட ஏதுவாக, 1987-ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டம் திருத்தப்படும் என அவர் சொன்னார்.
ஆகக் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்ததில், மதுபோதை அல்லது போதைப்பொருள் மயக்கத்தில் மரண விபத்துகளை ஏற்படுத்தும் குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு, 2020 அக்டோபர் முதலே அவை அமுலுக்கும் வந்து விட்டன.
44-ஆவது சட்ட விதிகளின் படி, முதன் முறையாக செய்யும் அக்குற்றங்களுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், 50,000 முதல் 100,000 ரிங்கிட் வரையிலான அபராதமும் விதிக்கப்படுகின்றன.
மீண்டும் அதே குற்றத்தைப் புரிந்தால், மேலும் கடுமையான அதாவது, 15 முதல் 20 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனையும், 100,000 முதல் 150,000 ரிங்கிட் வரையில் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், சாலைப் பயனீட்டாளர்களின் பாதுகாப்பை எந்நேரமும் உறுதிச் செய்யும் வகையில் சட்டங்களையும் அமுலாக்க நடவடிக்கைகளையும் தொடர்ந்து கடுமையாக்க அரசாங்கம் கடப்பாடு கொண்டிருப்பதாக அந்தோணி லோக் கூறினார்.
அண்மையக் காலமாக அதிகரித்து வரும் மரண விபத்துகள், குறிப்பாகக் கவனக்குறைவால் மற்றும் மது போதையில் வாகனமோட்டுவதால் ஏற்படும் சம்பவங்கள் காரணமாக, இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்று கூட, கிள்ளானில், மதுபோதை மற்றும் போதைப்பொருள் மயக்கத்தில் காரோட்டிச் சென்ற 20 வயது இளைஞர், அப்பாவி மோட்டார் சைக்கிளோட்டியை மோதினார்.
அதில் மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.



