
கோலாலம்பூர், செப்-15-கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 2-ல் விமானத்தின் சக்கரப் பகுதியில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நபரை அடையாளம் காண காவல் துறை அவரது குடும்பத்தினரைத் தேடி வருகிறது.
ஆகஸ்ட் 19 முதல் காணாமல் போனவர்கள் அல்லது தொடர்பு கொள்ள முடியாதவர்களின் குடும்பத்தினர், குறிப்பாக KLIA-வுடன் தொடர்புடையவர்கள் அல்லது அப்பகுதியில் இருந்தவர்கள், காவல் துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அச்சம்பவத்தை திடீர் மரணமாக வகைப்படுத்தி ஆகஸ்ட் 27 ஆம் தேதியே விசாரணை தொடங்கப்பட்டு விட்டதாக KLIA மாவட்ட காவல் துறை தலைவர் உதவி ஆணையர் எம். ரவி தெரிவித்தார்.
ஜப்பானின் Tokyoவில் இருந்து KLIA2 வந்த விமானத்தின் சக்கரப் பகுதியில், துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து பொறியியல் பிரிவு ஊழியர்கள் மேற்கொண்ட சோதனையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலத்துடன் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை. உயிரிழந்தவர் 17 முதல் 25 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் என நம்பப்படுகிறது. முதற்கட்ட பரிசோதனையில் உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் காணப்படவில்லை.
அவர் பின்புறம் டிராகன் உருவமும் முன்புறம் ‘OAKLEY’ என்ற எழுத்துகளும் கொண்ட வெள்ளை நிற ஹூடி, வெளிர் நீல நிற ஜீன்ஸ், பழுப்பு நிற தோல் பெல்ட், காலுறைகள் மற்றும் கருப்பு நிற விளையாட்டு காலணிகளை அணிந்திருந்ததாக எம். ரவி விளக்கினார்.
சடலம் சவப் பரிசோதனைக்காக செர்டாங் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தகவல் தெரிந்தவர்கள் KLIA மாவட்ட காவல் தலைமையகத்தை 03-87768926 என்ற எண்ணிலும், விசாரணை அதிகாரியை 011-14453057 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.



